தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவை த…

தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், இனிகோ இருதயராஜ் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லஷ்மி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (25) நீதியரசர் தி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தத் தருணத்தில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என முதலமைச்சர் விஜய் தரப்பிலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதியரசர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 86ஆவது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டியுள்ளது. கடந்த முறை வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருந்தேன் என்றார்.

இதைத் தொடர்ந்து இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதியரசர், 'எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை வரை அவகாசம் வழங்கினார்.

அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.