"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாவட்ட செயலகங்களின் ஏற்பாட்டில் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் கடந்த 27ஆம் திகதி முதல் "தேசிய நேர்…

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாவட்ட செயலகங்களின் ஏற்பாட்டில் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் கடந்த 27ஆம் திகதி முதல் "தேசிய நேர்மை வாரம்" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களின் ஊடாகத் தூய்மையான அரச சேவையைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி, நகரின் முக்கிய வீதி வழியாக காந்தி பூங்கா வரை ஊர்வலமாகச் சென்றது.

"க்ளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த ஊர்வலத்தில், செயற்திட்டத்தின் நோக்கங்களை வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின் இறுதியில், நேர்மை வாரத்தின் முக்கியத்துவம் குறித்து அரசு ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

மட்டக்களப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் திணைக்கள உயர் அதிகாரிகள், பொலிஸ் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் அனைத்துப் பிரதேச செயலக உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வாலகிருஸ்ணா