நேபாளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ரசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த வெள்ளப்பெருக்கில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். வீடுகள், வாகனங்கள் மட்டுமின்றி பெரிய பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீர் வெள்ளப்பெருக்குக்…
நேபாளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ரசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த வெள்ளப்பெருக்கில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். வீடுகள், வாகனங்கள் மட்டுமின்றி பெரிய பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீர் வெள்ளப்பெருக்குக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ரசுவா மாவட்டத்தில் பெய்த மழை மட்டுமே இத்தகைய வெள்ளத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திபெத் பகுதியில் பனிப்பாறை உருகி அல்லது வெடித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, திபெத் பகுதியிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் மாயமாகியுள்ளதாகவும் சீனாவின் சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்தவும், தொடர்ந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்காணிக்கவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோசி மற்றும் கண்டக் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இந்தியாவின் பிஹார் மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநில தலைமைச் செயலர் பிரத்யாயா அம்ரித், ஆற்றங்கரையோர மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, நிலவரத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.












