தாய்லாந்தின் நோந்தபுரி மாகாணத்தில் உள்ள டெப்சிரின் நோந்தபுரி (Debsirin Nonthaburi) இரண்டாம் நிலைப் பள்ளியில் மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஆசிரியர்கள் மற்றும் மூன்று மாணவர்கள் உட்பட குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக…

தாய்லாந்தின் நோந்தபுரி மாகாணத்தில் உள்ள டெப்சிரின் நோந்தபுரி (Debsirin Nonthaburi) இரண்டாம் நிலைப் பள்ளியில் மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஆசிரியர்கள் மற்றும் மூன்று மாணவர்கள் உட்பட குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிகவும் கொடூரமான பள்ளித் துப்பாக்கிச் சூடுகளில் இது ஒன்றாகும்.

வெள்ளிக்கிழமை காலை பாங்காக்கிற்கு வடக்கே உள்ள பாங் குவாய் (Bang Kruai) மாவட்டத்தில் அமைந்துள்ள இப்பள்ளியில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டவுடன் பயந்துபோன மாணவர்கள் வகுப்பறைகளில் மேசைகளுக்கு அடியில் கதறி அழுதபடி பதுங்கிக் கொண்டனர். அவசர காலப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் உதவியுடன் மாணவர்கள் உடனடியாகப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவத்தில் மேலும் ஒரு டூசுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் டிரைரோங் பிவ்பான் (Trairong Phiwphan) தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிதாரியான மாணவன் உயிரிழந்துவிட்டதாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியான போதிலும், அவன் தற்போது கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக டிரைரோங் உறுதிப்படுத்தியுள்ளார்.

தாய்லாந்தின் மத்திய விசாரணைப் பணியகம் தற்போது நிலைமை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் தரையில் சிதறிக்கிடந்த ஒற்றைத் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சந்தேக நநபரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானதாக நம்பப்படும் நிலையில், அந்த ஆயுதத்தை மாணவன் எவ்வாறு பெற்றான் என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெற்றோருடன் வாழாமல், வயது வந்த உறவினர்களுடன் வசித்து வந்தவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

தென்கிழக்காசிய நாடுகளில் துப்பாக்கி உரிமம் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாகத் தாய்லாந்து விளங்குவதுடன், கடந்த காலங்களிலும் இது போன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.