2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியதன் படி குண்டுதாரிகளுக்கு சாதாகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த குற்றவாளிகளான இருவர், இன்னும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் இன்றி சுதந்திரமாக இருக்கின்றனர். ஜ…
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியதன் படி குண்டுதாரிகளுக்கு சாதாகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த குற்றவாளிகளான இருவர், இன்னும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் இன்றி சுதந்திரமாக இருக்கின்றனர். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குற்றப்புலனாய்வுத் துறையிடம் (CID) உள்ளன. பரிந்துரைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு மூன்றாவது முறையாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நடவடிக்கை எடுக்குமாறு CID க்கு நேரடி அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் லலித் பதிநாயக்க ஆகியோர் இத்தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கண்டுபிடிக்கவில்லை என்றது. ஆனால், அதைவிடவும் பாரதூரமான ஒரு விடயத்தைக் கண்டுபிடித்துள்ளது: 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி அதிகாலைக்கு முன்னர் கொழும்பின் பாதுகாப்பு கட்டமைப்பின் முக்கிய புள்ளியான கட்டளையிடும் பதவிகளை வகித்த இவர்கள் இருவரும், தாக்குதலைத் தடுத்திருக்கக்கூடிய கட்டமைப்பு சார்ந்த புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் செயல்பாடற்று இருந்துள்ளனர். புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கைஅக்காலத்தில் கொழும்பு வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தென்னகோனின் நடத்தை குறித்து ஆணைக்குழு அறிக்கையில், கட்டளைச் சங்கிலி எவ்வாறு செயலிழந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க என்பவரால் விரிவான புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டு தெளிவான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன. உடல் பரிசோதனைகள், வாகனச் சோதனைகள், வாகன நிறுத்துமிடக் கட்டுப்பாடுகள் மற்றும் தேவாலயங்களைச் சுற்றி சாதாரண உடையில் பொலிஸாரைப் பாதுகாப்பில் ஈடுபடுத்துதல் ஆகியவை அந்த உத்தரவுகளில் அடங்கும். இவற்றில் எதுவுமே களமட்டத்தை வந்தடையவில்லை. தென்னகோன் தனது சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்களுக்கு இந்த உத்தரவுகளை அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அவரது மேசை கோப்பிலேயே பார்வையிடாமல் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொலிஸ் உயர் அதிகாரிகள் நாடு முழுவதையும் விழிப்புடன் வைத்திருந்த நேரத்தில், தென்னகோனின் உத்தியோகபூர்வ தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது. அவர் தனது குடும்பத்தினருடன் கிழக்குக் கடற்கரை ஓய்வு விடுதி ஒன்றில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஒரு நேரடி தேசிய பாதுகாப்பு நெருக்கடியின் போது ஒரு கட்டளை அதிகாரி தொடர்பில் இல்லாமல் இருப்பது, விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியபடி, முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலைமையாகும். மேலும் அப்போதைய கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த பதிநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டும் பாரதூரமானதே.தாக்குதலுக்கு முன்னர் சில மணிநேரங்களில் ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு அவருக்கும் தெளிவான, உடனடியாகச் செயல்படக்கூடிய எச்சரிக்கைகள் கிடைத்திருந்தும் அவரும் அலட்சியப் போக்கிலே இருந்துள்ளார்.
உத்தரவுகளை செயல்படுத்திய அதிகாரி அப்போது கொழும்பு தெற்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்கிரமசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் பாதுகாப்புத் திட்டத்தை அப்படியே செயல்படுத்தியிருந்தார். அதிகாரிகளைப் பணியில் அமர்த்துதல், தெஹிவளை உட்பட தனது அதிகாரப் எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் இலக்கு வைக்கப்பட்ட சோதனைகளை நடத்துதல் மூலம் அவரது பிரிவில் அச்சுறுத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டன. தாக்குதலினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தடுத்திருக்க முடியும் என்பதற்கு ஆணைக்குழுவிற்கு கிடைத்த தெளிவான சான்று இதுவாகும்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகள்: தேசபந்து தென்னகோன் - புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் செயல்படத் தவறியமை, பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தவறியமை, அல்லது அதிகாரிகளைப் பணியில் அமர்த்தத் தவறியமை - முறையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், குற்றவியல் அலட்சியம் குறித்து வழக்குத் தொடுப்பதற்கான விசாரணையை நடத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லலித் பதிநாயக்கவுக்கும் மேற் குறித்த பரிந்துரைகளையே விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள ஆதாரங்களின்படி, இரு அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகளைத் தொடங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டு வெவ்வேறு நிர்வாகங்களின் கீழ் முறையான அறிவுறுத்தல்கள் CID க்கு இரண்டு முறை அனுப்பப்பட்டுள்ளன. இரண்டு முறையும் கோப்பு முன்னோக்கி நகரவில்லை. முன்னாள் CID பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க - தென்னகோன் மற்றும் பதிநாயக்க ஆகிய இருவருக்கும் நெருக்கமானவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.அவரது மேற்பார்வைக் காலத்தில் விசாரணைகளைத் தாமதப்படுத்துவதில் அவரது பங்கும் இருந்தது CID ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.












