தம்பலகாமம் - பத்தினிபுரம் பகுதியில் கழிவுகளை அகற்றுவதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சிலர் வீதியோரங்களில் வீட்டுக்கழிவுகள் மற்றும் வணிகக்கழிவுகளை கொட்டி வருவதால் அசௌகரியங்களை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வீதியோரங்களில் கழிவுகளை கொட்ட வேண்டாம…
தம்பலகாமம் - பத்தினிபுரம் பகுதியில் கழிவுகளை அகற்றுவதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சிலர் வீதியோரங்களில் வீட்டுக்கழிவுகள் மற்றும் வணிகக்கழிவுகளை கொட்டி வருவதால் அசௌகரியங்களை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வீதியோரங்களில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என அதிகாரிகளால் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை சிலர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கழிவுகளை வீசி செல்வதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.கழிவுகளால் ஏற்பட்டுள்ள நிலைமை
இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில், முறையற்ற விதத்தில் கொட்டப்படும் பொலித்தீன் பைகள் மற்றும் பிற கழிவுகள் பலத்த காற்றினால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் குடிநீர் கிணறுகளுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன.
இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், குடிநீரும் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இறைச்சி மற்றும் கோழிக் கழிவுகள் வீதியோரங்களில் வீசப்படுவதால், உணவை தேடி ஏராளமான தெரு நாய்களும் காட்டு யானைகளும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருகின்றன.
வீதிகளில் யானைகள் மற்றும் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி விபத்து அபாயத்திற்கு உள்ளாவதோடு, அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.எவ்வித தீர்வும் எடுக்கப்படவில்லை
இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்த போதிலும், இதுவரை எவ்வித முதற்கட்ட நடவடிக்கையோ அல்லது நிரந்தரத் தீர்வோ மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, பாரிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்கு முன் பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வீதியோரங்களில் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், ஒதுக்கப்பட்ட கழிவு சேகரிப்பு இடத்தில் கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












