யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.இந்நிலையை உடனடியாகக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு…
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.இந்நிலையை உடனடியாகக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு அவர் அதிரடி பணிப்புரை வழங்கியுள்ளார்.ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட உயர்மட்டக் கலந்தாய்வின் போது, நிலவும் மோசமான சுகாதாரச் சூழல் குறித்தும், அதனைத் தடுப்பதற்கான பல்துறை கூட்டு வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தேசிய மட்டத்தில் 1 லட்சம் பேருக்கு 15 பேர் என்ற அளவில் உள்ள இந்நிலை, யாழ்ப்பாணத்தில் 1 லட்சம் பேருக்கு 30 பேர் எனும் இரு மடங்கு வீதத்தை எட்டியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.குறிப்பாக இளைஞர்களும் பெண்களுமே அதிகளவில் இவ்வாறான தவறான முடிவுகளை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.
மதுப்பழக்கம், குடும்ப வன்முறைகள், உறவுகளுக்கு இடையிலான தொடர்பாடல் இடைவெளி, தனிமை மற்றும் கடுமையான உளவியல் அழுத்தங்களே இதற்கான முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இச்சிக்கலை வெறும் சுகாதாரத் துறையின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் கல்வி, நிர்வாகம், பொலிஸ், ஆன்மீகம் மற்றும் ஊடகங்களை உள்ளடக்கிய "மாகாண அளவிலான சமூக இயக்கமாக" மாற்ற வேண்டும்.இதுவரை பதிவான உயிரிழப்புகள் குறித்த பின்னணியை விரிவாக பகுப்பாய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ளவர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
பல்வேறு திணைக்களங்களுக்கு இடையே நிலவும் இடைவெளியைப்போக்கி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையத்தை உடனடியாக மீளமைக்க வேண்டும்.
மன அழுத்தம், குடும்பச் சிக்கல்கள் அல்லது தனிமையால் தவிப்பவர்கள் உடனடி உளவியல் ஆலோசனை பெற, வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 'நேயம்' (021 222 6666) என்ற 24 மணிநேர இலவச அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இங்கு தகவல்கள் முற்றிலும் இரகசியமாகப் பேணப்படும்.












