வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன் குணசேகரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (04.08.2026) செவ்வாய்க்கி…
வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன் குணசேகரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.சுற்றுலா மேம்பாட்டுத்திட்டம் இக்கூட்டத்தின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அப்பகுதியில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்குப் பல முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முன்வருகின்றபோதிலும், வனவளத் திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்டவர்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் நிலவும் தாமதங்கள் குறித்து ஆளுநர் எடுத்துரைத்துள்ளார்.
ஆளுநர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் அவதானிப்புகள் குறித்து கவனம் செலுத்திய சுற்றுலாத்துறை பிரதியமைச்சர், மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது தொடர்பிலும், மாவட்ட ரீதியிலான ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு துரிதமாகச் செயற்படுத்துவது என்பது குறித்தும் ஆளுநருடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.












