பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்திற்காக சுவீகரிகப்பட்ட காணிக்கான நட்டஈடு வழங்குதல் தொடர்பான கூட்டம் பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பிற்கென மயிலிட்டி வடக்கு(J/246), தென்மயிலை(J/240), பலாலி மேற்கு(J/256), குரும்பசிட்டி(J/242) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 1986ஆம் ஆண்டுகாலப்ப…

பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்திற்காக சுவீகரிகப்பட்ட காணிக்கான நட்டஈடு வழங்குதல் தொடர்பான கூட்டம்

பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பிற்கென மயிலிட்டி வடக்கு(J/246), தென்மயிலை(J/240), பலாலி மேற்கு(J/256), குரும்பசிட்டி(J/242) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 1986ஆம் ஆண்டுகாலப்பகுதியில் பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. இந் நிலையில் குறித்த காணி உரிமையாளர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் நோக்கில் காணி உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் நேற்று (04.08.2026) தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. சிவகெங்கா அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றலுடன்நடைபெற்றது. குறித்த காணிகளுக்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் விலை மதிப்பீட்டு அறிக்கையை பெற்றுக் கொள்ளவது அவசியமென்பதால் இதற்கான சம்மதம் தெரிவிக்கும் படிவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. காணி உரிமையாளர்களின் காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்வதற்காகவே ஆகும். தொடர்ந்து தமது காணிகளுக்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்த காணி உரிமையாளர்களிடம் விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கு ஏதுவாக அவர்களது காணிகளை 2022ஆம் காலப்பகுதிக்கு உரியதாக மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் காணி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட படிவத்தின் ஆங்கில மொழி மூலமான படிவமும் தமிழ் மொழி மூலமான படிவமும் ஒப்படைக்கப்பட்டது. குறித்த படிவத்தில் தீர்மானிக்கப்பட்ட மதிப்பீட்டினை நட்ட ஈடாக பெற்றுக்கொள்ள சம்மதிக்கிறேன் என்ற சொற்றொடர் தமக்கு குழப்பமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய காணி உரிமையாளர்கள், அதனை விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விலை மதிப்பீட்டுக்கு உடன்படுகிறேன் என மாற்றுமாறு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தனர். குறித்த விடயம் அமைச்சுக்கு உட்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மாவட்ட அரசாங்க அதிபர் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக இதனைத் திருத்தி அமைச்சுக்கு அனுப்பி அவர்களிடமிருந்து முடிவினை பெற்றுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டதுடன், அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக காணி உரிமையாளர்களை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டதுடன், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.இதேவேளை, சுவீகரிக்கப்பட்ட மேற்படி காணிகளுக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக்கொடுக்க கடந்த 40 ஆண்டுகளாக பிரதேச செயலகம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளது. அதன் அடிப்படையில், 1986 ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு விலைமதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டிற்கு அமைய, நஷ்டஈடு வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான காணி உரிமையாளர்கள் தமது சம்மதத்தைத் தெரிவித்திருந்த போதிலும், ஒரு சில காணி உரிமையாளர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல், தமக்குரிய காணிகளை வழங்குமாறு கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.