யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றக் கூட்டம் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ருவான் ரணசிங்க அவர்களின் தலைமையில், நேற்று (04.08.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மர…

யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றக் கூட்டம் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ருவான் ரணசிங்க அவர்களின் தலைமையில், நேற்று (04.08.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், கூட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரதிநிதிகளை அன்புடன் வரவேற்றார். சுற்றுலா அபிவிருத்தி தொடர்பாக கௌரவ (பேராசிரியர்) ருவான் ரணசிங்க அவர்கள் இரண்டு நாட்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் கள விஜயம் மேற்கொண்டு பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா அபிவிருத்திக்காக 130 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்திற்கு அதிகளவான நிதி கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் தெரிவித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டிற்கான சுற்றுலா அபிவிருத்திச் செயற்திட்டங்களைத் தயாரிக்கும் பொருட்டு அனைத்து பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றத் கெளரவ தவிசாளர்கள் மற்றும் யாழ்ப்பாண மாநகர கெளரவ முதல்வர் ஆகியோர் தரமான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தை கவர்ச்சிகரமான சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும், மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நகரின் அழகியல், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார். எனவே, மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சுத்தமான, அழகிய மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பகுதிகளாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், சுற்றுலா அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை காணப்படுவதாகவும், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் விரிவடையும் என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக, புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் காலப்பகுதிகளில் அவர்களை கவரக்கூடிய வகையில் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஆக்கபூர்வமான யோசனைகள் மற்றும் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். அபிவிருத்திப் பயணத்தில் பல்வேறு சவால்கள் ஏற்படுவது இயல்பானது என்றும், அவற்றை சரியான முறையில் அடையாளம் கண்டு தீர்வுகளை நடைமுறைப்படுத்தினால் அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும் என்றும் தெரிவித்தார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தின் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை மாவட்டத்திற்கு அழைத்து வருவதன் நோக்கம், யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளக்கூடிய அனைத்து அபிவிருத்தி வாய்ப்புகளையும் ஆராய்ந்து விரைவாக நடைமுறைப்படுத்துவதாகும் என்றும் தெரிவித்தார். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் மாவட்ட மக்கள் தமது கடவுச்சீட்டு தேவைகளை இங்கிருந்தே பூர்த்தி செய்து கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், நெடுந்தீவிற்கான புதிய குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய படகு சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயற்பட வேண்டுமெனவும் அரசாங்க அதிபர் தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.