அமெரிக்க நீதித் துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, அமெரிக்க செனட் சபை உள்ளிட்ட பல முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடக்கியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க நீதித் துறை, சக்திவளத் துறை, சுகாதாரத் துறை, தேசிய சு…

அமெரிக்க நீதித் துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, அமெரிக்க செனட் சபை உள்ளிட்ட பல முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடக்கியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க நீதித் துறை, சக்திவளத் துறை, சுகாதாரத் துறை, தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்கா, தென் கொரியாவைச் சேர்ந்த நான்கு தனியார் நிறுவனங்கள் இந்த இணைய ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் பயன்படுத்தி வந்த 'க்யூஸ்கேன்' மற்றும் 'க்யூடிரூட்டர்' ஆகிய இரு ஹேக்கிங் தளங்களின் இணையக் கட்டுப்பாட்டு டொமைன்களை அமெரிக்க நீதித் துறை கைப்பற்றி முடக்கியுள்ளது.குறைந்தது 2018-ஆம் ஆண்டு முதல் உலகளாவிய அளவில் இந்த ஊடுருவல்கள் நடந்துள்ள நிலையில், இத்தளங்களைச் சீனாவைச் சேர்ந்த 'நாஞ்சிங் சின்ஜியூவே நெட்வொர்க் டெக்னாலஜி' என்ற நிறுவனம் இயக்கி வந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சீனாவின் உளவு அமைப்பு மற்றும் 'மக்கள் விடுதலை இராணுவம்' ஆகியன உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் முதன்மை வாடிக்கையாளர்களாக இருந்து செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசு அமைப்புகளின் சார்பாக இதுபோன்ற பல நவீன இணைய ஊடுருவல்களைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களே முன்னின்று நடத்துவதாகச் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை,, இக்குற்றச்சாட்டுகள் குறித்து வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் தங்களுக்குப் பங்கில்லை என்றே சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.