நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதிக்கும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான சந்திம வீரக்கொடி குற்றம் சாட்டினார். கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில் இ…

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதிக்கும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான சந்திம வீரக்கொடி குற்றம் சாட்டினார்.

கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே மக்கள் தற்போதைய அரசுக்கு ஆணையளித்தனர். இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொண்டது.சரியான அணுகுமுறைஎனினும், மக்கள் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் அரசமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டு, மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கு அரசமைப்பில் இடமில்லை.இவ்வாறான திருத்தங்களுக்குப் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் சூழலில், நீதிபதிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் அரசு ஏன் செயற்பட வேண்டும்?

முன்னாள் பிரதம நீதியரசர்கள் 10 பேர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்திலும், அரசமைப்புத் திருத்தங்களை கடந்த காலத்துக்குப் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்த முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசமைப்பின்படி ஓய்வுபெறும் வயது 65 என இருக்கும்போது, 67 வயது வரை பதவியில் நீடிக்க அனுமதிப்பது பல சட்ட ரீதியான கேள்விகளை எழுப்புகின்றது. வழக்குகளை விரைவுபடுத்துவதற்காகவே இந்தச் சேவைக்கால நீடிப்பு எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலான வழக்குகள் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன. எனவே, அந்த நீதிமன்றங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே சரியான அணுகுமுறையாகும்.

இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மட்டுமன்றி, சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. பொதுமக்கள், நீதிபதிகள் அல்லது சட்டத்தரணிகள் யாரும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை.

எனவே, அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, அரசமைப்பு விதிகளை மதித்து, நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.