நல்லாட்சி அரச காலத்தில் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். அந்தக் கா…
நல்லாட்சி அரச காலத்தில் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
அந்தக் காலப்பகுதியில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையே எடுக்கப்பட்டதே தவிர, அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (29.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தீர்மானம் எடுக்கப்படவில்லை
அவர் மேலும் தெரிவிக்கையில், 2015, 2016, 2017 காலப்பகுதியில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள், நீதிபதிகளின் எண்ணிக்கையே அப்போது அதிகரிக்கப்பட்டது. நீதிமன்ற முறைமைச் சட்டத்தைத் திருத்தி மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தோம். இதற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
தற்போதைய திருத்தத்தின் குறிப்பிட்ட திகதியைக் கவனிக்கும் போது, இது ஒரு தனிநபரை இலக்கு வைத்தது என்பது தெளிவாகின்றது. தனிநபரை இலக்கு வைத்த அரசமைப்புத் திருத்தம் எனக் கடுமையான விமர்சனங்கள் எழும்போதே, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாத்திரமின்றி அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுகின்றது என அரசாங்கம் நியாயம் கூற முற்படுகின்றது.தயாரிக்கப்பட்டுள்ள வரைவு இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நீதி அமைச்சில் இதற்காக எப்போது ஒரு குழு கூடியது? நாடாளுமன்றத்தின் நீதி விவகார ஆலோசனைக் குழு கூடிப் பரிந்துரைகளைப் பெற்றதா? இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குவதற்கு முன்னதாகவே, இந்த வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டத்தரணிகள் சங்கம் புறக்கணிக்கப்பட்டமை ஏன்?
அரசமைப்பின் 107 ஆவது பிரிவில் உள்ள அனைத்து விதிகளும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான இந்த விதிகளில் கைவைக்கவில்லை. அவருக்குப் பின்வந்த எந்தவொரு ஜனாதிபதியும் இதில் தலையிடவில்லை.
நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீரழிக்கும், ஒரு தனிநபரை இலக்கு வைக்கும், நீதித்துறை சுயாதீனத்தை இல்லாதொழிக்கும் இந்த அர்த்தமற்ற திருத்தத்தைக் கொண்டுவரும் பாவச் செயலில் பங்கேற்க வேண்டாம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.












