உலகளாவிய ரீதியில் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய எல் நினோ (El Niño) நிகழ்வு இம்முறை கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே எச்சரித்துள்ளார். பசிபிக் பெருங…

உலகளாவிய ரீதியில் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய எல் நினோ (El Niño) நிகழ்வு இம்முறை கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே எச்சரித்துள்ளார்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல் நினோ நிகழ்வு ஆரம்பித்துள்ளதாகவும், தற்போது அது பலவீனமான நிலையில் காணப்பட்டாலும் எதிர்வரும் மாதங்களில் அதன் தாக்கம் தீவிரமடையும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் தாக்கமாக நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடுமையான வறட்சியான வானிலை நிலவி வருவதுடன், சில இடங்களில் நீர்நிலைகள் வற்றிப்போயுள்ளதால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையை ஒக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய வறட்சியான காலநிலை நீடிக்கும் வரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

எல் நினோவால் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாராளுமன்றத்தால் சட்டபூர்வமாக நிறுவப்பட்ட அனர்த்த முகாமைத்துவ நிதியம் இதுவரை முழுமையாக செயற்படுத்தப்படவில்லை என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரியவந்துள்ளது.