பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த விவகாரம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்போது அது…

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த விவகாரம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்போது அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் முன்னாள் அமைச்சரோ அல்லது அவரது செயலாளரோ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. டுபாயிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட மிதிகம ருவன் அளித்த வாக்குமூலத்திலேயே இது வெளிவந்துள்ளது. மிதிகம ருவன் ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பராவார். பணம் கைமாறப்பட்ட விதம் "அமைச்சரிடம் சொல்லி இந்த வேலையை முடித்துக் கொள்ளலாம், அவர் ஜனாதிபதியிடம் பேசி நடவடிக்கை எடுப்பார்" எனக் கூறி இந்தப் பணம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பணம் பெற்றபோது அந்த நபர் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருக்கவில்லை. ஜனாதிபதியுடன் தனக்குள்ள நெருங்கிய தொடர்பைப் பயன்படுத்தி இந்த வேலையைச் செய்வதாகக் கூறியுள்ளார். எனினும், இது முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்தே நடந்ததா அல்லது அவருக்குத் தெரியாமல் நடந்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின் வேகம் இன்னும் போதியளவில் இல்லை என்ற கேள்வி எழுகிறது.மிதிகம ருவன் மற்றும் ஹரக் கட்டாவின் மனைவி ஆகியோருக்கு "பணம் கேட்கிறார்கள், பணத்தைக் கொடுங்கள்" என்று கூறியவர் ஹரக் கட்டா தான். குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது, அங்கிருந்த தொலைபேசியைப் பயன்படுத்த ஒரு அழைப்பிற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் முறைப்பாடுகளும் உள்ளன. எனவே, இந்த வழக்கில் நதுன் சிந்தகவே முக்கிய சாட்சியாவார். ஆனால்,இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதுவரை நதுன் சிந்தகவிடம் வாக்குமூலம் எதுவும் பெறவில்லை. விசாரணை சரியாக நடப்பதாக இருந்தால் அவரது வாக்குமூலம் கட்டாயம் பெறப்பட வேண்டும். தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பணத்தைக் கொடுக்குமாறு அவரே கோரியுள்ளார். எனவே, ஹரக் கட்டாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலம் இலங்கை வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். பின்னணியில் நடந்த உண்மைகள், இதில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், தொலைபேசி அழைப்புகள் என அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.