குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவும், சிறையில் பாதுகாப்பாக அடைக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான அரசுப் பொருளான கைவிலங்கு, செங்கல்பட்டு நகர காவல் நிலைய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு காவலரின் பைக்கில் ஹெல்மெட் திருடுபோய்விடாமல் இருக்கப் பூட்டப்ப…
குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவும், சிறையில் பாதுகாப்பாக அடைக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான அரசுப் பொருளான கைவிலங்கு, செங்கல்பட்டு நகர காவல் நிலைய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு காவலரின் பைக்கில் ஹெல்மெட் திருடுபோய்விடாமல் இருக்கப் பூட்டப்பட்டிருந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் அங்கு சாட்சிகளுக்காக வந்தவர்கள் இதனால் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாகப் பெண் காவலர்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்தும் பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமைப் பெண் காவலராகப் பணியாற்றிய திருமதி தாமரைச்செல்வி, தனது கணவரால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குடும்பப் பிரச்சினை தொடர்பாகக் காவல்துறையின் கவனத்திற்குப் புகார்கள் சென்றிருந்தும், ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாதது ஏன்? என்று வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேபோல, சிவகங்கை அருகே பெண் காவலர் ஒருவர் மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான செய்தியும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகப் பெண்களைப் பாதுகாக்க "சிங்கப்பெண் அதிரடிப்படை" உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுவது கொடூரமானது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியிருந்தார்.
இத்தகைய சூழலில்தான், போலீசாரின் வாகனங்களுக்கும் பாதுகாப்பு இல்லையா என்ற கேள்தியை எழுப்பும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இந்தக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் ஒரு காவல் நிலைய வாசலிலேயே ஒரு காவலரின் ஹெல்மெட்டுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அங்கு என்ன உத்தரவாதம் இருக்க முடியும்? பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர், தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு அதிகாரத்தையும் அரசுப் பொருட்களையும் இப்படிப்பட்ட சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? சட்டம் மற்றும் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர்களே இப்படி விதிகளுக்குப் புறம்பாகச் செய்யலாமா? என்றெல்லாம் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கைவிலங்கைத் தனிப்பட்ட பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவது துறை ரீதியான விதிமீறலாகும் என்பதால், சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.












