கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் தொடர்பில் மத்திய அரசு உடனடியாகத் தூதரக ரீதியில் தலையிட வேண்டும் என தமிழக முதல்வர் சி. ஜோசப…
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் தொடர்பில் மத்திய அரசு உடனடியாகத் தூதரக ரீதியில் தலையிட வேண்டும் என தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு வியாழக்கிழமை (13) கடிதம் அனுப்பியுள்ள முதல்வர் விஜய், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் ஆகஸ்ட் 12ஆம் திகதி இரவு இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். தற்போதைய நிலவரப்படி, 49 இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, ராமேஸ்வரம் பகுதி மீனவ சமூகத்தினர் தொடர்ந்து இடம்பெறும் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஒன்றரை மாதங்களில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மூன்றாவது படகு இதுவென சேவியர் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் சேவியர் தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட படகு வெலிங்டன் என்ற உள்ளூர் மீனவருக்குச் சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து இயங்கும் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், ஆகஸ்ட் 12ஆம் திகதி 300-க்கும் சற்று அதிகமான படகுகளே கடலுக்குச் சென்றதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படலாம் என்ற தொடர்ச்சியான அச்சமே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.












