இந்தோனேசியாவில் அதிகமான நிலப்பரப்பை அழித்து பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 50,000 தீயணைப்பு வீரர்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீ காரணமாக உருவான அடர்ந்த புகை மற்றும் மோசமான காற்றுமாசு காரணமாக, மாணவர்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும…

இந்தோனேசியாவில் அதிகமான நிலப்பரப்பை அழித்து பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 50,000 தீயணைப்பு வீரர்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத்தீ காரணமாக உருவான அடர்ந்த புகை மற்றும் மோசமான காற்றுமாசு காரணமாக, மாணவர்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பல பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு கற்றல் நடவடிக்கைகள் இணையவழி மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எல் நினோ (El Nino) காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையே இந்தக் காட்டுத்தீ பரவலுக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.காட்டுத்தீ சுமாத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் உள்ள ஆறு பிரதான மாகாணங்களில் காட்டுத்தீ மிக மோசமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இரசாயனத் தெளிப்புகள் மூலம் செயற்கை மழையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் விசேட விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், மழை மேகங்களின் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கைகளில் சவால்கள் நிலவுவதாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள பிரபல தேசிய பூங்கா ஒன்றில் பரவிய காட்டுத்தீ பெருமளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், நாடு முழுவதும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் அடங்கிய பெரும் படைகள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.