இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. 236 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வீதி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம், நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இவ்வீதியை நவீன வசதிகளுடன் கூடிய இருவழிச் சாலையாக மேம்படுத்துவதற்கு நட…
இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. 236 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வீதி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம், நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இவ்வீதியை நவீன வசதிகளுடன் கூடிய இருவழிச் சாலையாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரம் A9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் சுமார் 5 கிலோமீற்றர் நீளத்திற்கு அமைந்துள்ள தனித்துவமான நகர அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, A9 பாதையை மையமாகக் கொண்டுள்ள நகர அமைப்பிற்கு மேலதிகமாக, மாவட்ட செயலகத்தை மையமாகக் கொண்ட ஒரு மத்திய நகரப் பகுதியை உருவாக்குவது நீண்டகால அபிவிருத்தி நோக்கமாக இருந்து வந்துள்ளது. 2013ஆம் ஆண்டு புதிய மாவட்ட செயலகம் அமைக்கப்பட்டதன் பின்னர், மாவட்ட செயலகத்தைச் சுற்றிய பகுதிகளில் நகர விரிவாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அப்பகுதிகளுக்கான வீதி வசதிகளின் சீரின்மை மற்றும் ரயில்வே தண்டவாளத்தின் அமைவு உள்ளிட்ட காரணிகளால் எதிர்பார்க்கப்பட்ட வேகத்தில் நகரமயமாக்கல் இடம்பெறவில்லை. இந்நிலையில், இவ்வீதியை அகலப்படுத்தி இருவழிச் சாலையாக அபிவிருத்தி செய்வதன் மூலம், A9 பிரதான வீதியிலிருந்து மாவட்ட செயலகத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் சிறந்த வீதி வலையமைப்புடன் இணைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வீதி அபிவிருத்தியின் மூலம் வீதியின் இருபுறங்களிலும் நகர விரிவாக்கம் வேகமடைவதற்கும், புதிய குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதார செயற்பாடுகள் விரிவடைவதற்கும் சாதகமான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இவ்வீதி அபிவிருத்தித் திட்டமானது, மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், நடவடிக்கைகளின் விரிவாக்கம், நகர வளர்ச்சி மற்றும் மக்களின் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கும் பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாவட்ட செயலகத்தை மையமாகக் கொண்ட நகர அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும், கிளிநொச்சி நகரத்தின் எதிர்கால நகரமயமாக்கலை விரைவுபடுத்துவதற்கும் இவ்வீதி முக்கிய இணைப்பாக அமையவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் நகர அபிவிருத்தியில் முக்கிய மைல்கல்லாக அமையவுள்ள இத்திட்டத்தின் மூலம், மாவட்ட செயலகப் பகுதியைச் சுற்றிய நகர விரிவாக்கம் மேலும் வலுப்பெறுவதுடன், அப்பகுதி மக்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












