கிழக்கு ஆளுநரினால் சான்றுபடுத்தப்பட்ட பாடசாலை மற்றும் தடுப்பு இல்லம் திறந்துவைப்பு சான்றுபடுத்தப்பட்ட பாடசாலை மற்றும் தடுப்பு இல்லம் மட்டக்களப்பு, வாழைச்சைனையில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மா…

கிழக்கு ஆளுநரினால் சான்றுபடுத்தப்பட்ட பாடசாலை மற்றும் தடுப்பு இல்லம் திறந்துவைப்பு

சான்றுபடுத்தப்பட்ட பாடசாலை மற்றும் தடுப்பு இல்லம் மட்டக்களப்பு, வாழைச்சைனையில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'சான்று படுத்தப்பட்ட பாடசாலை மற்றும் தடுப்பு இல்லம் திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு, வாழைச்சேனை கும்புறுமூலை பகுதியில் இன்று 04.08.2026 திகதி திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி மற்றும் நிதி அமைச்சின் தேசிய பாதீட்டு நிதியிலிருந்து கிழக்கு மாகாணத்தின் நலன் கருதி அமைக்கப்பட்ட குறித்த கட்டிடத்தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.வி.எம். சுபியான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி ஜெயந்தலால் ரட்ணசேகர சுகாதார அமைச்சின் செயலாளர் H.M.W .G.திசாநாயக்க, கிழக்கு மாகாண கட்டடத் திணைக்கள பணிப்பாளர் திருமதி புவனேஸ்வரி, முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜெ.முரளிதரன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிறுவர் சீர்திருத்த உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் கலாசார முறையில் அதிதிகள் அழைத்துவரப்பட்டு தேசியகொடியேற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு கட்டிடத்தொகுதினை நாடாவெட்டி திறந்துவைத்தனர். அதன் பின்னர் குறித்த வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. அதன் பின்னர் நிகழ்வு மண்டபத்தில் மங்கல விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கம் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து சிறுவர் இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் மீள் இணைக்கப்பட்டவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக துவிச்சக்கர வண்டி மற்றும் தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆளுநர் மற்றும் அதிதிகளுக்கு நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.