தற்போதைய அரசாங்கம் மக்கள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயற்படுகின்றது என்றால், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமகாராம விஜிதபுர பகுதியில் இன்று (29) விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்த…

தற்போதைய அரசாங்கம் மக்கள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயற்படுகின்றது என்றால், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமகாராம விஜிதபுர பகுதியில் இன்று (29) விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், அரசாங்கம் தொடர்பில் மக்களிடம் காணப்படும் ஆதரவு மற்றும் நிலைப்பாட்டை தேர்தல் முடிவுகள் மூலம் அறிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் புதிய அரசியல் பயணத்திற்கான மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்படுத்த முடியும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் நிலையில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் நீதித்துறையில் தலையீடு செய்து ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், தனிக்கட்சி ஆட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.