நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன்- கொழும்பு மற்றும் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதிகளில் மீண்டும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று முதல் இடைவிடாத…

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன்- கொழும்பு மற்றும் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதிகளில் மீண்டும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று முதல் இடைவிடாது பெய்து வரும் மழையால், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், மண் மற்றும் கற்கள் வீதியில் சரிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக பல இடங்களில் ஒரு வழிப் போக்குவரத்து மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருவதால், வாகன நெரிசலும் பயண தாமதங்களும் ஏற்பட்டுள்ளன.போக்குவரத்து பாதிப்புகுறிப்பாக, இன்று அதிகாலை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வூட்லன் மற்றும் குயில்வத்தை பகுதிகளில் பாரியளவில் மண் சரிந்து வீதியை மறைத்ததால், ஹட்டனிலிருந்து கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் பல மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டது.இதனையடுத்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இயந்திரங்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, வீதியில் குவிந்திருந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகளை முன்னெடுத்தன. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அறிவுறுத்தல் எனினும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மலைச்சரிவுகள் மேலும் தளர்ந்துள்ளன.இதனால் எந்நேரமும் புதிய மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களும், பிரதான வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்புடன் செயல்படுமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.