மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையைப் பாதுகாக்கும் செயற்திட்டம் ஆரம்பம் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், தொல்லியல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் "மரபுரிமைக்கு ஓர் உயிரோட்டம் – ஆயிரம் தொல்பொருளியல் தளங்களைப் பேணிப் பாதுகாக்கும் கருத்திட்டம்" என்ற தேசிய வேல…
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையைப் பாதுகாக்கும் செயற்திட்டம் ஆரம்பம்
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், தொல்லியல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் "மரபுரிமைக்கு ஓர் உயிரோட்டம் – ஆயிரம் தொல்பொருளியல் தளங்களைப் பேணிப் பாதுகாக்கும் கருத்திட்டம்" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டம் நேற்று (04) பழைய மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் டி.எஸ்.ஏ. ஷான் முனசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு பிராந்திய தொல்லியல் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் ஒல்லாந்தர் கோட்டையை மையமாகக் கொண்டு பல்வேறு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாக, கோட்டை வளாகத்தில் கட்டடங்களின் சுவர்கள் மற்றும் மதில்களில் பரவி வளர்ந்துள்ள மரவகைத் தாவரங்களை இரசாயன முறையில் அகற்றி பாதுகாக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நடவடிக்கை கோட்டையின் வரலாற்றுச் சிறப்பையும் கட்டட அமைப்பையும் நீண்டகாலம் பாதுகாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, “தொல்பொருளியல் மரபுரிமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரைகள் இடம்பெற்றதுடன் தொல்பொருள் மரபுகளைப் பாதுகாப்பதில் அரச திணைக்களங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டது. நாட்டின் தொல்பொருளியல் மரபுரிமைகளைப் பாதுகாத்து அவற்றின் வரலாற்று பண்பாட்டு மற்றும் கலாசாரப் பெறுமதிகளை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாகக் கையளிக்கும் நோக்கில் இத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.









-558474_850x460.jpg)


