கிளிநொச்சி, பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்த நபர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவரது கூற்றை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என நாடாளுமன்றத்தில் இன்று (20) விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பொதுப் பாதுகா…
கிளிநொச்சி, பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்த நபர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவரது கூற்றை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என நாடாளுமன்றத்தில் இன்று (20) விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குறித்த விவகாரன் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், குறித்த நபர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 14 நாட்கள் விளக்கமறியலில்..
விசாரணைகளின்போது, சந்தேகநபரிடம் இரண்டு போலி அடையாள அட்டைகள் இருந்ததும், அவர் ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். மோசடி உள்ளிட்ட மூன்று தனித்தனி குற்ற வழக்குகளிலும் அவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
குறித்த நபர் தன்னை வைத்தியரென பொய்யாக அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அவர் முன்னர் சில அமைச்சுப் பணியாளர்களுடன் ஆலோசகராகப் பணியாற்றியதாகவும், அந்த நியமனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சந்திப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள குறித்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும், அங்கு விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இயங்கியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார். மாறாக, அந்த இடம் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த இடம் கண்ணகிபுரம், பகுதியில் அமைந்துள்ளதாகவும், அது 1919ஆம் ஆண்டு வனக் காப்பகமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அரச காணி எனவும் தெரிவித்துள்ளார்.
அரச காணியில் சட்டவிரோத விவசாயம் மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் வன அழிப்பு மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குறித்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தியாகராசா குலதீபன் என்பவருக்கு எதிராக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் ஆரம்பத்தில் 10 ஏக்கர் காணி கற்றாழை மற்றும் காய்கறி செய்கைக்காக அழிக்கப்பட்டு, பின்னர் அது 20 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கு ஆடை உற்பத்தி நிறுவனமொன்றுக்காக மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரச காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம், சாகுபடி மற்றும் மணல் அகழ்வு ஆகியவையே இந்த விவகாரத்துடன் தொடர்புடையவை எனவும், விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பான விவகாரம் அல்ல எனவும் அரசாங்கம் விளக்கியுள்ளது .
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4












