நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்தமை உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டதுடன், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், மாவட்டத்தின் சு…

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்தமை உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டதுடன், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத்துறையும் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியிருந்த நிலையில், தற்போது காலநிலை படிப்படியாக வழமைக்கு திரும்பி வருவதையடுத்து, நுவரெலியாவை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக, டெவோன் மற்றும் சென்கிளயார் நீர்வீழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக பெருமளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்தியா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இம்முறை அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா விடுதி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.நடைபாதை வியாபார நடவடிக்கை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நீண்ட நாட்களாக மந்தநிலையில் காணப்பட்ட நடைபாதை வியாபார நடவடிக்கைகளும் மீண்டும் சூடுபிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் நுவரெலியா மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவது சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.