சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பம் யாழ். சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (02.08.2026) காலை 8.00 மணியளவில், சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் திரு. ராகுலன் அவர்களின…

சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பம்

யாழ். சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (02.08.2026) காலை 8.00 மணியளவில், சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் திரு. ராகுலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இத் திட்டத்திற்காக அமைச்சினால் ரூபாய் 4.1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றம் இடம்பெற்றது. பின்னர் வரவேற்புரை மற்றும் சிறப்புரைகள் நிகழ்ந்தன.இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா அவர்கள், சங்கானை நகரம் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இங்குள்ள சந்தையும் கூட்டுறவுச் சங்கமும் சங்கானைக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கியுள்ளன. மேலும், பல்வேறு சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் முன்னிலை வகித்த நகரமாகவும் சங்கானை திகழ்கிறது. இவ்வாறான பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகச் செயற்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணியின் ஒரு பகுதியாக, இளைஞர்களுக்கான விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவது முன்னுரிமையாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். விளையாட்டு மைதானங்கள் இல்லாத சூழலில் இளைஞர்கள் தவறான பாதைகளுக்குச் செல்லும் அபாயம் இருப்பதால், அவர்களின் ஆற்றலை நேர்மறையான வழியில் வழிநடத்த விளையாட்டை ஊக்குவிப்பது அவசியம் என்றார். இந்த மைதானத்தை நவீனமயமாக்குவதற்காக சுமார் ரூ. 41 இலட்சம் நிதி ஒதுக்கியமைக்காக அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், மைதானத்திற்கான மலசலகூட வசதி மற்றும் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கும் தேவையான நிதி வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்திருப்பதையும் வரவேற்றார். இப்புனரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, இப்பகுதி இளைஞர்கள் மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொடர்ந்து, கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள் கழக அங்கத்தவர்களிடம் கையளித்து திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.