வட மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேலும் வலுப்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சாதிக்கக்கூடிய வீரர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் கரப்பந்…

வட மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேலும் வலுப்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சாதிக்கக்கூடிய வீரர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று(02.08.2026) நடைபெற்றபோது கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தின் விளையாட்டுத்துறையின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் தொடர்ச்சியாக பெருமளவு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் விளையாட்டு உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். வட மாகாணத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை உருவாக்குவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாகாணத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதிகள் முழுமையாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்கு மாத்திரமன்றி, வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை விளையாட்டு மைதானங்களை புனரமைத்து மேம்படுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கமைய, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்படும் பாடசாலைகளின் விளையாட்டு மைதான அபிவிருத்திக்காக தலா 50 இலட்சம் ரூபாய் வரையான நிதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வட மாகாண இளைஞர்களிடம் விளையாட்டுத் திறன் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர், அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும், விளையாட்டுத்துறையில் அவர்களை மேலும் ஊக்குவிப்பதற்கும் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். விளையாட்டு என்பது கல்விக்கு தடையாக அமையும் விடயம் அல்ல எனவும், மாறாக ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், தலைமைத்துவப் பண்பு மற்றும் சிறந்த மனப்பாங்கை வளர்க்கும் ஒரு முக்கியமான துறையாகும் எனவும் தெரிவித்தார். மேலும், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உட்கட்டமைப்புகளை புனரமைப்பதற்கும், புதிய விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கும் மேலதிக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இத்திட்டங்கள் ஊடாக பிரதேச மக்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும் எனவும் குறிப்பிட்டார். நெடுந்தீவு உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேவையான மதிப்பீடுகள் கிடைக்கப்பெற்றவுடன் அப்பகுதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் வட மாகாணம் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போட்டியிடக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் முக்கிய மையமாக வளர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் இணைந்து செயற்பட்டால் வட மாகாணத்தின் விளையாட்டுத்துறை மேலும் பல சாதனைகளைப் படைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். மேலும், சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் விளையாட்டு வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்குவதற்கான தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.