நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்த இருவர், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தெமட்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்த இருவர், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் சிறையில் உள்ள போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின்படி, கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் 7.5 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, தனது சகோதரரைப் பார்வையிடுவதற்காக சந்தேகநபரும் அவரது நண்பரும் மட்டக்களப்பிற்கு வந்து, கல்லடி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரின் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், அவர்களிடமிருந்து 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர், இதற்கு முன்னரும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.











