“நாங்கள் இங்கே ஒரு நகைச்சுவைக் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தோம்!” என்று மமிதா பைஜுவும் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் நகைச்சுவைக் காட்சிக்கான படப்பிடிப்பில் ராதிகா சரத்குமார் நடித்துக் கொண்டிருந்தபோது, அவரது தாயார் கீதா ராதா உயிரிழந்த செய்த…
“நாங்கள் இங்கே ஒரு நகைச்சுவைக் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தோம்!” என்று மமிதா பைஜுவும் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் நகைச்சுவைக் காட்சிக்கான படப்பிடிப்பில் ராதிகா சரத்குமார் நடித்துக் கொண்டிருந்தபோது, அவரது தாயார் கீதா ராதா உயிரிழந்த செய்தி அவருக்குத் தெரியவந்தது.
ஆனால், உடனடியாக படப்பிடிப்புத் தளத்திலிருந்து புறப்படாமல், முதலில் அந்தக் காட்சியை முடித்துவிட்டு செல்லலாமா என்று ராதிகா கேட்டுள்ளார்.
இது தொடர்பான உருக்கமான சம்பவத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்ட நேர்காணலில் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் சக நடிகர்களான சூர்யா, மமிதா பைஜு ஆகியோர் சமீபத்தில் நினைவுகூர்ந்துள்ளனர்.
அந்தக் காட்சியில் சுமார் 85 சதவீதம் ஏற்கனவே படமாக்கப்பட்டிருந்ததாகவும், மீதமுள்ள காட்சிகளை பின்னர் மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்கும் என்பதால், அதை முடித்துவிட்டுச் செல்ல ராதிகா வலியுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் ஒரு முழுமையான நகைச்சுவைக் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ராதிகா மேடத்தின் தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. ஆனால், அவர் ‘இந்தக் காட்சியை மட்டும் முடித்துவிட்டு நான் கிளம்பலாமா?’ என்று கேட்டார்.
ஒரு நொடிக்கு நான் அப்படியே உறைந்து போய்விட்டேன். என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன்” என்று இயக்குநர் வெங்கி அட்லூரி நினைவுகூர்ந்தார்.ஒருபுறம் நகைச்சுவைக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் ராதிகாவின் தாயார் உயிரிழந்த செய்தி வந்திருந்தது. இந்த இரண்டுக்கும் இடையிலான முரண்பாடு படக்குழுவினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. “நாங்கள் இங்கே ஒரு நகைச்சுவைக் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தோம்!” என்று மமிதா பைஜுவும் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
ராதிகாவை ஷூட்டிங்கிற்குச் செல்லச் சொன்ன அவரது தாயார்
இந்த முடிவுக்குப் பின்னால் தனது தாயாரின் விருப்பமும் இருந்ததாக ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். தனது தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்திருந்தபோதிலும், அவரது தாயார் மருத்துவமனையில் இருந்த நிலையில் ராதிகா படப்பிடிப்புத் தளத்திற்கு வந்திருந்தார். 85 சதவீத காட்சி முடிந்துவிட்டது. இன்னும் 5 ஷாட்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது. அந்தக் காட்சியை பின்னர் மீண்டும் உருவாக்குவது சாத்தியமில்லாத ஒன்று. என் அம்மா மருத்துவமனையில் இருந்தபோதுதான் நான் ஷூட்டிங்கிற்கு வந்தேன். நிலைமை மிகவும் மோசமாக இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், என் அம்மா, ‘இல்லை, நீ போய் ஷூட்டிங்கை முடி’ என்று சொன்னார்” என்று ராதிகா கூறியுள்ளார்.
மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியான கீதா ராதா, வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, 2025 செப்டம்பர் மாதம் சென்னையில் தனது 86வது வயதில் உயிரிழந்தார். அப்போது தனது தாயாரின் மறைவு குறித்து ராதிகா சரத்குமார் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 2026 ஜூன் மாதம், இயக்குநர் பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தியபோதும் தனது தாயாரைப் பற்றி ராதிகா பேசியிருந்தார். தன்னை இன்றைய நிலைக்கு உருவாக்கிய இரண்டு முக்கியமான நபர்களில் தனது தாயாரும் ஒருவர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ராதிகாவின் நடிப்பைப் பார்த்து நெகிழ்ந்த மமிதா பைஜு
ராதிகாவுக்கும் அவரது தாயாருக்கும் இடையிலான உறவு குறித்து படப்பிடிப்புக்கு முந்தைய நாளே தன்னிடம் ராதிகா பேசியதாக மமிதா பைஜு தெரிவித்துள்ளார். முந்தைய நாள் அவர் என்னிடம் பேசும்போது, தனது அம்மாவுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். தனது அம்மாவுடனான பாசப் பிணைப்பு, அவரது உடல்நிலை குறித்து எல்லாம் என்னிடம் பேசினார். எனக்கும் என் அம்மாவுடன் இதேபோன்ற ஒரு நெருக்கமான உறவு இருப்பதால், அவருடைய உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது” என்று மமிதா கூறினார்.
இதனால், மறுநாள் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சம்பவம் மமிதாவை மேலும் வேதனைப்படுத்தியது. அதனால், அந்த நாள் ஷூட்டிங்கின்போது அந்தச் செய்தி வந்ததும் நான் உண்மையிலேயே உடைந்து போய்விட்டேன். ஆனால், அவர் அந்தக் காட்சியில் நடித்துக்கொண்டிருப்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். முழுமையான அர்ப்பணிப்புடன், அந்தக் கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய், நகைச்சுவைக் காட்சியை அவர் நடித்துக்கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில், சக நடிகையாக அவரைப் பார்த்து என்னால் எதுவுமே பேச முடியவில்லை” என்று மமிதா பைஜு நினைவுகூர்ந்தார்.
ராதிகாவின் சினிமா அர்ப்பணிப்பைப் பாராட்டிய சூர்யா
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் மமிதா பைஜு மற்றும் ராதிகா சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் சூர்யா, ராதிகாவின் இந்த முடிவு சினிமா மீதான அவரது ஆழமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
“தனது கலைக்கு அவர் அளிக்கும் மிகப்பெரிய மரியாதையைப் பாருங்கள். பல தசாப்தங்களாக அவர் இப்படியொரு புகழ்பெற்ற திரைப்பயணத்தைத் தொடர்ந்து வருவதற்கு அந்த அர்ப்பணிப்புதான் காரணம். சினிமா தனக்கு அளித்த அனைத்திற்கும் அவர் வைத்திருக்கும் ஆழமான அன்பையும் மரியாதையையும் இது வெளிப்படுத்துகிறது” என்று சூர்யா பாராட்டினார்.
தென்னிந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வரும் ராதிகா சரத்குமார், நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி பிரபலமாகவும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.












