இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், பிரபல தமிழ் தொழிலதிபருமான தினேஷ் சாப்டர் மரணமடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் பல கோணங்களில…
இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், பிரபல தமிழ் தொழிலதிபருமான தினேஷ் சாப்டர் மரணமடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் கடந்த அரசாகத்தில் அவை மந்த நிலையை அடைந்து மறைக்கப்பட்டிருந்தன.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மரணம் தொடர்பான விசாரணைகள் மீண்டு முன்னெடுக்கப்பட்ட நிலையில் முன்னேற்றமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விசாரணைகளில் ஏற்பட்டுள்ள திருப்பம்தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தினேஷ் ஷாப்டர் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து, கடந்த கால குற்றப் புலனாய்வு மற்றும் புதிய விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றது. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கும் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கும் இடையே பாரிய வித்தியாசம் இல்லாத வகையிலேயே விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில சம்பவங்கள் - அதாவது சில அறிவியல் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அந்த சான்றுகளின் அடிப்படையில் இது ஒரு கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது வெறும் சந்தேகமே. அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சில ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.அதில் ஒன்று, அவருக்குக் கிடைத்த மற்றும் அவரிடமிருந்து அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் மின்னஞ்சல்கள் (Email) தொடர்பான தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் மொழி மற்றும் பாணிக்கு முற்றிலும் பொருந்தாத வேறு ஒரு பாணியிலேயே அந்த SMS மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே, உண்மையிலேயே அதை அவர்தான் அனுப்பினாரா அல்லது இதில் மூன்றாம் தரப்பு ஏதும் தலையிட்டுள்ளார்களா என்பது குறித்தே தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மின்னஞ்சல்களுக்கு மூன்றாம் தரப்பு யாரேனும் தலையிட்டிருந்தால் நிச்சயமாக இது ஒரு கொலை என்பதை உறுதிப்படுத்தி விசாரணைகள் முடுக்கி விடப்படும். இதன் காரணமாக, அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காகத் தேவையான அனைத்துத் தகவல்களும் அறிக்கைகளும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் சில விடயங்கள் நம்பகத்தன்மையற்றதாகத் தோன்றினாலும், அவற்றை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் இன்னும் சரியாகக் கிடைக்கவில்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த விசாரணை சரியாக முன்னெடுக்கப்பட்டு எதிர்காலத்தில் ஒரு சரியான அறிக்கை கிடைக்கும் என நாம் நம்புகிறோம்.அது அரச இராசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையுடன் ஒப்பிடப்பட்டு உறுதி செய்யப்படும்.












