வெள்ளப்பெருக்கு நிலை தொடர்வதால் நாட்டின் சில பகுதிகளில் வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேல், தென், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் குறிப்பாக வயிற்றுப்போக்கு மற்…
வெள்ளப்பெருக்கு நிலை தொடர்வதால் நாட்டின் சில பகுதிகளில் வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
மேல், தென், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் குறிப்பாக வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, தோல் நோய்கள், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களின் அறிகுறிகள் தென்பட்டவுடன் தாமதிக்காமல் அருகிலுள்ள அரச வைத்தியசாலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரை அணுகி சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அசுத்தமான வெள்ளநீரின் ஊடாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால், அதற்கான தடுப்பு மருந்துகளை முன்னெச்சரிக்கையாகப் பெற்றுக்கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அருகிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகங்கள் மூலம் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதாகவும், பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.












