தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சருக்கு எதிராக அவதூறான கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரைப் பொலிஸார் க…
தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சருக்கு எதிராக அவதூறான கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் அரசு மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கத் தவறியதைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்கு எதிராக இரட்டை அர்த்தத்தில் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, த.வெ.க. மகளிரணி சார்பில் தஞ்சை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், உதயநிதிக்கு எதிராக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உதயநிதியைக் கைது செய்வதற்காகத் தஞ்சையிலிருந்து வந்த சிறப்புக் காவல் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர்.
இந்தச் செய்தி பரவியதை அடுத்து, உதயநிதியின் வீட்டின் முன்பு திரண்ட தி.மு.க. தொண்டர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், தொண்டர்களைக் கலைத்துவிட்டு உதயநிதியை விசாரணைக்காகத் தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
இதேவேளை, உதயநிதியின் பேச்சுக்கு எதிராகத் த.வெ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், உதயநிதியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் த.வெ.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







-558441_850x460.jpg)




