கல்முனை வைத்தியசாலை முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடைப் பிரச்சினையை வைத்து இரண்டு தரப்புக்கள் குளிர்காய்வதாகக் குற்றம்சாட்டிய தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன், அதில் ஒன்று அரசாங்கத் தரப்பு என்றும…

கல்முனை வைத்தியசாலை முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடைப் பிரச்சினையை வைத்து இரண்டு தரப்புக்கள் குளிர்காய்வதாகக் குற்றம்சாட்டிய தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன், அதில் ஒன்று அரசாங்கத் தரப்பு என்றும், மற்றொன்று இனவாதத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்திச் செயற்படும் தரப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் பேசுகையில்,

"கல்முனை ஆதார வைத்தியசாலைக்குப் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான பிரச்சினை தற்போது பேசப்படுகிறது. பலர் பல விடயங்களைக் குறிப்பிடுகிறார்கள். அனைவரும் இதன் பின்னணியைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் கூட்டணி இந்த விடயம் பற்றி பேச வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தனது உரையில் குறிப்பிடுகிறார். இந்தச் சம்பவத்துடன் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் கூட்டணி பறக்கப் போகிறது என்று இன்னொரு அரசியல்வாதி கூறுகின்றார்.

தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதை விரும்பாத இரண்டு தரப்பினர்கள் இங்கு உள்ளனர். ஒன்று அரசாங்கத் தரப்பு; தமிழ் பேசும் பிரதான 6 அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எதிர்காலத்தில் அது தமக்குச் சவாலாக அமையும் என்பதை அரசாங்கம் நன்கறியும். இன்னொன்று, இனவாதத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்திச் செயற்படும் தரப்பு.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் பேச வேண்டும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள் பேச வேண்டும்; இரண்டு இனத்தவர்களும் அடித்துக்கொள்ள வேண்டும்; அதனூடாகத் தாம் அரசியல் லாபம் தேட வேண்டும் என்பதே இந்த இரண்டாவது தரப்பின் எண்ணம். இந்த இரண்டு தரப்பும் தற்போதைய பிரச்சினையைக் கொண்டு குளிர்காய்வது வெளிப்படையாகத் தெரிகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இந்த விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிக்கை ஊடாக உத்தியோகபூர்வமாக விரைவில் அறிவிக்கும். இந்தச் சீருடைப் பிரச்சினையில் தமிழ் மக்களையும், தமிழ் அதிகாரிகளையும் தொடர்புபடுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது நிலைப்பாடு. இந்தச் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை அரசாங்கமே வெளியிட்டது. முஸ்லிம் சமூகத்தினர் கலாசார ஆடையுடன் சேவைக்கு வருகை தரும் வகையில் சுற்றுநிருபத்தைத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடமே குறிப்பிட வேண்டும். அதனை விடுத்து, சுற்றுநிருபத்தைத் திருத்தம் செய்யாமல் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்.

இவர்கள்தான் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கும், கொரோனா காலத்தில் முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களைத் தகனம் செய்யும் தீர்மானத்திற்கும் ஆதரவளித்தார்கள். அப்போதைய ஆட்சியாளர்களின் காலில் விழுந்து கிடந்தார்கள். சுற்றுநிருபம் பற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தற்றுணிவு இல்லாமல், இன்று இவர்கள் தமிழ் மக்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள்; இனவாதமாகப் பேசுகிறார்கள். இது முற்றிலும் தவறானது.

முஸ்லிம் மக்கள் அவர்களின் கலாசார ஆடையுடன் சேவையில் ஈடுபடுவது அவர்களின் சுதந்திரமாகும். திருத்தங்களை முன்னெடுப்பதை விட்டுவிட்டு, வைத்தியர் சுகுணன் மொசாட் அமைப்புடன் தொடர்புடையவர் என்று அவர் மீது குற்றம்சாட்டுவது முறையற்றது. கடந்த அரசாங்கங்களில் சுகாதார அமைச்சில் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் ஏன் இந்தச் சுற்றுநிருபம் பற்றி பேசவில்லை?

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் போது பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. பேச்சுவார்த்தைகள் ஊடாகத் தீர்வு காண்பதற்கே முயற்சிக்கிறோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற பல விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தால், தீர்க்கப்பட வேண்டிய பல அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாத நிலை ஏற்படும். முஸ்லிம் சகோதரிகள் அவர்களின் கலாசார அம்சங்களுடன் பணிகளில் ஈடுபடும் வகையில் அரசாங்கம் சுற்றுநிருபத்தை வெளியிட்டால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். அதனை விடுத்துவிட்டு, கல்முனை வைத்தியசாலையை மாத்திரம் இலக்கு வைத்து அந்த மக்களையும், அதிகாரிகளையும் இனவாதத்துடன் குற்றம்சாட்டும் ஒருசில அரசியல்வாதிகளின் மிகவும் கேவலமான செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் முரண்பாடற்ற வகையில் தீர்வை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்றார்.