சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், அதற்காகவே புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகச் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அம…

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், அதற்காகவே புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகச் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   வியாழக்கிழமை (20) அன்று பெண்கள், இளம் வயதினர் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில்,

"சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது பெரும்பாலும் வறுமை நிலை காரணமாகவே இடம்பெறுகின்றது என்பதைப் குறிப்பிட முடியும். இதனைக் கவனத்திற்கொண்டு, எமது அரசாங்கம் வறுமையை ஒழிப்பதற்கும் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாக்கப்படும் வகையிலான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையில் கட்டாயமாகக் கல்வி பயிலும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 16 வயது வரை கல்வி கற்க வேண்டியது அவசியமாகும் என்பதைக் கருத்திற்கொண்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாம் கொழும்பு நகரம் உட்பட முக்கியமான பகுதிகளில் வீடுகளில், கடைகளில் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள் அல்லது பெண்களை நோக்கினால், அவர்கள் மலையகப் பகுதி அல்லது வறுமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர். அந்த வகையில், அத்தகைய சிறுவர்களின் கல்வி உரிமை மட்டுமன்றி ஏனைய உரிமைகளும் இல்லாதொழிக்கப்பட்ட கடந்த காலங்களை நாம் சிந்திக்க வேண்டும்.

பாதுகாப்பற்ற மற்றும் பொருத்தமற்ற கடுமையான வேலைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த நிலையிலிருந்து அவர்களை மீட்டு, அவர்களுக்கான கல்வியை வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பொருளாதார நிலைமைகள் காரணமாகச் சிறுவர்கள் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது" என்றார்.