அரசின் அச்சுறுத்தல் காரணமாகவே இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருந்த கலந்துரையாடலில் பங்கேற்க வருகை தரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) விசேட கூற்றை முன்வைத்தே அவர் இவ்வாறு குற்றம்சாட்ட…

அரசின் அச்சுறுத்தல் காரணமாகவே இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருந்த கலந்துரையாடலில் பங்கேற்க வருகை தரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (20) விசேட கூற்றை முன்வைத்தே அவர் இவ்வாறு குற்றம்சாட்டினார். அவர் மேலும் பேசுகையில்,

"22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதியரசர்களை உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்காமை தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்குச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பான சகல கடித ஆவணங்களையும் ஹன்சாட் பதிவில் பதிவிடுகிறேன். இது தொடர்பில் இதற்கு முன்னர் சபாநாயகருக்கும் சபை முதல்வருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், ஊடகங்கள் வாயிலாகத் தவறான பிரசாரங்கள் கொண்டு செல்லப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இது எனது தனிப்பட்ட ஒரு அழைப்பு அல்ல; நான் ஒரு ஒருங்கிணைப்பாளராகவே (facilitator) இதில் செயற்பட்டேன்.

சபாநாயகர் ஊடாகப் நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரும் இதில் பங்கேற்க வேண்டும் என்றே நான் கூறினேன். இதனை வேறு விதமாகத் தவறாகச் சித்தரித்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் புதன்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து, எதிர்க்கட்சி முன்வைத்த யோசனை காலத்திற்கேற்றது என்றும், அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் கவனத்திற்கொள்ளப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இது தொடர்பில் அரச தரப்பில் அச்சுறுத்தல் விடுக்கும் பாணியிலான நிலைப்பாடு காணப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையினால், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஒரே நிலைப்பாட்டிற்கு வருமாறு அதில் கோரப்பட்டுள்ளது.

புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தலான தொனியிலேயே உரையாற்றினர். இந்நாட்டில் அரசியலமைப்பின் ஊடாகக் கருத்துத் தெரிவிக்கும், பேச்சுரிமை இல்லையா எனக் கேள்வி எழுப்புகிறேன். அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை நிறைவேற்று அதிகாரத்தினாலோ, மூன்றில் இரண்டு பெரும்பான்மையினாலோ, எந்தவொரு நபராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே, இப்போதாவது இந்தக் கலந்துரையாடலுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். சபாநாயகரும் ஒரு ஒருங்கிணைப்பாளராக (facilitator) இப்போதாவது செயற்பட வேண்டும்.

இந்த விடயத்தில் தெளிவாகவே அரசாங்கத்திடமிருந்து அச்சுறுத்தலான தோரணை காணப்பட்டது. தற்போது சட்டத்தரணிகள் சங்கம் வேறொரு நாளைக் கோரியுள்ள வேளையில், அரசாங்கத்திற்குச் சார்பான ஊடகங்கள் சட்டத்தரணிகள் சங்கம் அதனை நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. ஆனபடியால், இப்போதாவது இவை திருத்தப்பட்டு, சரியான விடயங்களை முன்வைக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவரைப் போன்றே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஒரு பிரஜையாவார். பிரஜைகளைச் சமமாக நடத்துவது அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.