சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும், அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவி…

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும், அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.கொழும்பில்,இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப்பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமானதால் விளக்கமறியலில் உள்ள கைதிகள் பிணை பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், அதனை நிவர்த்தி செய்ய 70 புதிய பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய நவீன இயந்திரங்களும் கொண்டுவரப்படவுள்ளன.

இதன் மூலம் மாதமொன்றிற்கு 7,500 முதல் 9,000 வரையிலான அறிக்கைகளை விரைவாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் தொடர்பான சட்டத் திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், மேல்நீதிமன்றங்கள் மூலமாகவே விரைவாக பிணை பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படவுள்ளது.

எனவே, சிறைச்சாலைக்குள் ஒரு சிலர் ஏற்படுத்தும் வன்முறைகளுக்கோ அல்லது சதித்திட்டங்களுக்கோ பலியாகாமல் பொறுமையுடன் செயற்படுமாறும், அரச உடைமைகளுக்கோ அல்லது சிறைச்சாலைச் சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்க வேண்டாம் என்றும் கைதிகளிடம் தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.