மன்னார் - சின்னக்கடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட குருசு நகர் பகுதியில், நகரசபைக்கு சொந்தமான தினசரி கழிவகற்றல் நிலையத்தில் இன்று (22.08.2026) மாலை குப்பைகள் திடீரென எரிக்கப்பட்டமையால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திடீரென குப்பைகள் எரியூட…

மன்னார் - சின்னக்கடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட குருசு நகர் பகுதியில், நகரசபைக்கு சொந்தமான தினசரி கழிவகற்றல் நிலையத்தில் இன்று (22.08.2026) மாலை குப்பைகள் திடீரென எரிக்கப்பட்டமையால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரென குப்பைகள் எரியூட்டப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக புகை வெளியேறி, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகை பரவுவதால், பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.பல்வேறு உடல்நலப் பிரச்சினை குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் உள்ளிட்டோர் புகையினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, குப்பைகள் தொடர்ந்து எரிவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னார் நகர சபையின் தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்ட போதிலும், அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குப்பைகள் முழுமையாக அகற்றப்படாமல் மீண்டும் மீண்டும் தீப்பற்றுவதால், தீயணைப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட பின்னரும் புகை வெளியேறும் நிலை தொடர்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.நிரந்தர தீர்வு மேலும், பொலித்தீன் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும் புகை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையையும் பெரிதும் பாதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக தொடரும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படாத நிலையில், மன்னார் நகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குப்பை எரிப்பை முற்றாகத் தடுத்து, முறையான கழிவு முகாமைத்துவ நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக வெளியேறும் புகையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ள போதிலும், தீயணைப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் பிரச்சினையின் அடிப்படை காரணம் தீர்க்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.