மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74,900 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்குத் தேவையான 15 இலட்சத்து 43 ஆயிரத்து 500 கிலோ உரத்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74,900 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்குத் தேவையான 15 இலட்சத்து 43 ஆயிரத்து 500 கிலோ உரத்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சிவனேசனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எச். அருள்ராஜா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆர். யோகராஜன், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர், விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் கே. திலகநாதன், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் நிலவும் வறட்சி மற்றும் காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை குறைப்பது தொடர்பில் கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக எல் நினோ தாக்கத்தினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள், நீர் கிடைப்பதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
பல குளங்களின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்துள்ள நிலையில், பெரும்போகச் செய்கைக்கு தேவையான நீரை முறையாக முகாமைத்துவம் செய்வது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதனுடன், தற்போது நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மை, பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கருத்துகளை முன்வைத்தனர்.
குறிப்பாக, முந்தனையாறு திட்டத்தை முன்னெடுப்பதில் காணப்படும் தடைகள் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பில் விவசாயிகள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர். திட்டத்தை வினைத்திறனுடன் முன்னெடுத்து விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அதேவேளை, பெரும்போக நெற்செய்கைக்கான விதை நெல் விநியோகம், உரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், விவசாயக் காப்புறுதி, வங்கிகளின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், குளங்களை அபிவிருத்தி செய்தல், மண் அகழ்வு, விவசாய வீதிகள் மற்றும் வாய்க்கால்களை புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மேலும், விவசாயிகள் எதிர்கொள்ளும் யானை–மனித மோதல் பிரச்சினை மற்றும் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கான நஷ்டஈடு வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
விவசாயிகளுக்கு பெரும்போக காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண்பதுடன், காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ள தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல் மற்றும் உரங்களை உரிய காலத்தில் வழங்குவதோடு, நீர்ப்பாசன வசதிகளை முறையாக முகாமைத்துவம் செய்து பெரும்போக நெற்செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை துறைசார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.












