பாகிஸ்தானில் வியாழக்கிழமையன்று இடம்பெற்ற மாபெரும் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 10 பேர் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்…
பாகிஸ்தானில் வியாழக்கிழமையன்று இடம்பெற்ற மாபெரும் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 10 பேர் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம், சுரங்கத்தில் மீத்தேன் வாயு அதிகரித்ததன் காரணமாகவே ஏற்பட்டிருக்கலாம் என அரச சுரங்க ஆய்வாளர் கனி பலூச் (Ghani Baloch) அவர்களை மேற்கோள்காட்டி 'அசோசியேட்டட் பிரஸ்' (Associated Press) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெடி விபத்து ஏற்பட்டு சில மணி நேரங்களுக்குப் பின்னர் 7 உடல்களும், அதைத் தொடர்ந்து அவசர கால மீட்புக் குழுவினரால் மேலும் 25 உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகளும் மாகாண பேரிடர் மேலாண்மை முகாமையும் தெரிவித்துள்ளன. சிக்கியுள்ள தொழிலாளர்களைக் கண்டறிந்து மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து உடல்களும் மீட்கப்படும் வரை மீட்பப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று குறிப்பிட்ட சுரங்க ஆய்வாளர் கனி பலூச், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
“மீத்தேன் வாயு வெடிப்புகளுக்குப் பிறகு உயிருடன் யாரையாவது கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு; ஏனெனில் அங்கு ஆக்ஸிஜன் அளவு பூச்சியமாகக் குறைகிறது. மேலும், மீட்பப் பணியாளர்களும் சுரங்கத்திற்குள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே சென்று வருகின்றனர்” என்று பலூச் கூறினார்.
பலூசிஸ்தான் சுரங்கங்கள் மற்றும் கனிமத்துறை அமைச்சர் சோயிப் நோஷர்வானி (Shoaib Nosherwani), மீட்பப் பணியாளர்கள் மிகவும் சவாலான சூழ்நிலையில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். மேலும், இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் மாகாண அரசாங்கம் 500,000 பாக். ரூபாய் (சுமார் 1,800 அமெரிக்க டாலர்கள்) இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணையொன்றும் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.












