உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின் உடல் இடம்பெறவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். மேலும், சாரா ஜஸ்மின் விசாரணையா…
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் விசாரணையில், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட உடல்களில் சாரா ஜஸ்மினின் உடல் இடம்பெறவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
மேலும், சாரா ஜஸ்மின் விசாரணையாளர்களைத் தவறாக வழிநடத்த முயன்றமை விமான நிலைய சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சாரா ஜஸ்மினின் உடல் சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்டதாகக் காட்டும் நோக்கில் மூன்றாவது முறையாக DNA பரிசோதனை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரி விரிவான சாட்சியங்களையும் வழங்கியுள்ளார்.
சாரா ஜஸ்மின் தற்போது எங்கு சென்றார் என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை இல்லை. எனினும், அவர் சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழக்கவில்லை என்பது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சஹ்ரானின் குடும்பத்தினர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வேனில் வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆனால், வெடிப்புக்குப் பின்னர் தீக்கிரையான நிலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
இதனால், மற்றொரு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி சாரா ஜஸ்மின் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணையாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.












