சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு அதிகளவான நெருக்கடி முக்கிய காரணம் ஆகும். அதனால் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பிணை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துதல், அரசாங்கப் பரிசோதகர் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பரிசோதனை அறிக்கைகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பல சட்…

சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு அதிகளவான நெருக்கடி முக்கிய காரணம் ஆகும். அதனால் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பிணை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துதல், அரசாங்கப் பரிசோதகர் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பரிசோதனை அறிக்கைகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பல சட்ட மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.சிறைச்சாலை நெரிசல் கொழும்பில் செவ்வாய்க்கிழமை (4) விசேட நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில், பொதுவாக 11,801 பேரை மாத்திரம் தடுத்து வைக்கும் கொள்ளளவு கொண்ட 37 சிறைச்சாலைகள் மற்றும் முகாம்களில், கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி சுமார் 29,000 முதல் 30,000 கைதிகள் அதாவது கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுவினருக்கு எதிரான அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கைகளால் அதிகளவிலான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகள் நிரம்பியுள்ளமையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம் ஆகும். இந்தச் சிறைச்சாலை நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, பிணை வழங்கப்படுவதில் உள்ள தாமதங்களைத் தடுத்தல், அரசாங்கப் பரிசோதகர் திணைக்களத்திற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் ஊழியர்களை வழங்குவதன் மூலம் பரிசோதனை அறிக்கைகளை விரைவுபடுத்துதல் போன்ற பல சட்ட மற்றும் நிர்வாகத் திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிறைச்சாலைகளுக்கு உள்ளே இயங்கி வந்த போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கடத்தல்கள், தொலைபேசிப் பாவனைகள் என்பவை தற்பொழுது கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள், அங்கு கைதிக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தமை மற்றும் நிர்வாகத்திற்கு எதிராகச் சிலரால் திட்டமிட்டு குழப்பங்கள் உருவாக்கப்பட்டது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊடாக தீவிர மற்றும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சிறைக்குள்ளிருந்து கலவரத்தைத் தூண்டியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதற்கு வெளிநபர்களின் அல்லது ஏதேனும் அரசியல் மற்றும் அமைக்கப்பட்ட குழுக்களின் ஆதரவு உள்ளதா என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.